800 கோடிக்கு பிரம்மாண்டமா எடுத்தது அதை ஓடிடியில் ரிலீஸ் செய்யவா? பொன்னியின் செல்வன் குழு விளக்கம்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக சமூகவலைதளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் அடுத்த சில மாதங்களில் அடுத்தடுத்து வரிசையாக பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பேன் இந்தியா படங்களின் ரிலீஸ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அந்த வரிசையில் வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆர் ஆர் ஆர், டான், பீஸ்ட், கேஜிஎப் 2 என வரிசைகட்டி நிற்கின்றன படங்கள்.
இந்த வரிசையில் மற்றொரு படமாக பொன்னியின் செல்வன் திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் மே மாதம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வனில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொன்னியின் செல்வனை ஓடிடியில் ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சமூகவலைதளங்களில் போலியான செய்திகள் பரவின. ஆனால் அதை இப்போது படக்குழு மறுத்துள்ளது. கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கே பல கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாம். அந்த காட்சிகளை எல்லாம் திரையரங்கில் பெரிய திரையில் பார்த்தால் மட்டுமே ரசிகர்களால் முழுவதுமாக காட்சி அனுபவத்தைப் பெற முடியும் என்பதால் கண்டிப்பாக திரையரங்கில்தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.