என்.எல்.சி தேர்தலில் அதிமுக தோல்வி: அங்கீகாரம் இழந்தது அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் ஆளும் அதிமுக அரசின் ஆதரவு பெற்ற தொழிற் சங்கமான அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் தோல்வியடைந்தது.
என்.எல்.சி நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கம் மட்டுமே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். அதன்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களை தேர்வு செய்வது வழக்கம்.
அதன்படி நேற்று நடைபெற்ற தேர்தலில் சிஐடியு, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பிஎம்எஸ், பிடிஎஸ், ஏஐடியுசி, தொமுச ஆகிய 6 சங்கங்கள் போட்டியிட்டன. இதில் கம்யூனிஸ்ட் தொழிற் சங்கமான சி.ஐ.டி.யூ மற்றும் திமுகவின் தொ.மு.ச சங்கத்தினர் வெற்றி பெற்றனர்.
அதே நேரத்தில் ஆளும் அதிமுக அரசின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கமான அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் தோல்வியை சந்தித்தது. சி.ஐ.டி.யூக்கு 4828 வாக்குகளும், தொமுசவுக்கு 2428 வாக்குகளும், அண்ணா தொழிற் சங்கத்துக்கு 2035 வக்குகளும் கிடைத்தது.
இதன் மூலம் கம்யூனிஸ்ட் சங்கமான சி.ஐ.டி.யூ மற்றும் திமுகவின் தொ.மு.ச ஆகியவை என்.எல்.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.