அதிமுக பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை! – சென்னையில் அதிர்ச்சி!
சென்னை பெரம்பூரில் அதிமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் கக்கன் காலனி பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பெரம்பூர் தெற்கு பகுதி கழகச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். நேற்று இரவு கட்சிப் பணிகளை முடித்துவிட்டு வீட்டின் அருகே இளங்கோவன் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை வாகனம் ஒன்றில் வந்து வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் அவரை திடீரென பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர்.
இதில் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, பட்டாக்கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கொலை தனிமனித விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edit by Prasanth.K