வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (08:30 IST)

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – அணிகள் ஒன்றிணைப்பா ?

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுற்றது. தற்போது எடப்பாடிப் பழனிசாமி தலைமையில் அதிமுக அணியும் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக அணியும் செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டும் வார்த்தைப் போரில் ஈடுபட்டும் வருகின்றனர்.

ஆனால் மக்கள் மனதில் அதிமுக வுக்கோ அல்லது அமமுக வுக்கோ குறிப்பிட்டு சொல்லும் படியான இடம் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகாத் தெரிகிறது. கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைக் காணச்சென்ற அமைச்சர்களை மக்கள் எதிர்கொண்ட விதமே அதற்கு ஒரு பானை சோறு. அதனால் பிளவு பட்டிருந்தால் தங்களுக்குதான் இன்னும் மேலதிகமான சேதாரம் என்பதை உணர்ந்து கொண்ட இரு அணிகளும் ஒன்றுசேர விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதை உண்மை என நிரூபிப்பது போல நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக செய்தித் தொடர்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் அதிமுக அமமுக அணிகள் இணைவதற்கான நல்ல சூழல் தற்போது நிலவி வருகிறது. அணிகள் இணைந்தால் நல்லதுதான் எனத் திரியைக் கொளுத்திப் போட்டுள்ளார்.

இதையடுத்த நிகழ்வாக அதிமுக சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் டிசம்பர் 11 ஆம் தேதி (செவ்வாய்)  கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.

அடுத்தடுத்த இந்த தொடர் நிகழ்வுகளால் அணிகள் ஒன்றிணைப்பு நடக்கும் சாத்தியம் உருவாகியுள்ளதாக அதிமுக தொண்டர்களும் எண்ண ஆரம்பித்துள்ளனர். இன்னும் 6 மாதக் காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.