நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்கிறார்? பிரபல யூடியூபர் செந்தில் டுவீட்
பாஜக நிகழ்ச்சியில் விஜய் மக்கள் பங்கேற்றதாக தகவல் வெளியான நிலையில், இதுபற்றி விஜய் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பிரபல யூடியூபர் செந்தில் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் பாத யாத்திரையில் பங்கேற்று, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நபர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் மக்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பாத யாத்திரையின்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், தளபதி வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தால் எப்படி விஜய்யின் அனுமதியின்றி இக்கூட்டத்தில் பங்கேற்க முடியும் என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், பிரபல யூடியூபர் செந்தில், இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திரு.விஜய் அவர்களை ஜோசப் விஜய் என்று சொன்ன பாஜக வை ஆதரிக்க வந்திருக்கும் விஜய் ரசிகர்கள்.. இவர்கள் உண்மையிலேயே விஜய் மக்கள் மன்றத்தினராக இருந்தால், விஜய் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்கிறார் என்று பொருள். பி.கு : முன்பு அஜீத் ரசிகர்கள் பாஜக வில் இணைந்தனர் என்ற செய்தி வந்ததும் அஜீத் உடனே அதை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது என்று பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து, நடிகர் விஜய் சார்பில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,
தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.