நடிகர்களை விமர்சித்து வந்த பா.ம.க தலைவர் ராமதாஸின் கட்சிக்கு நடிகர் ரஞ்சித் துணை தலைவரா?
கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான ’பொன்விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதன் பிறகு சிந்துநதிப்பூ, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் மறுமலர்ச்சி போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
பின் திரைப்பட வாய்ப்புகள் இன்றி இருந்தவர் அதிமுக கட்சியில் இணைந்து நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராகவும் வலம் வந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஒபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்த போது, ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாளராக இருந்தார்.
அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் , பன்னீர்செல்வம் அணியை இணைத்த போது அதிமுக வுடனான தனது நெருக்கத்தையும் குறைத்துக் கொண்டார். பின் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி அவர் பா.ம.க தலைவர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.கவில் இணைந்தார்.
இந்த நிலையில் டாக்டர். ராமதாஸ் பா,ம,கவின் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் ரஞ்சித்தை நியமிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகர்களையும், நடிகர்களின் அரசியல் வருகையையும் பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்து வந்த ராமதாஸ், இப்போது ஒரு நடிகரை தன் கட்சியின் துணை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது அரசியல் விமர்சகர்களிடையே முக்கியமான விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.