செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (20:01 IST)

கருணாநிதி பெயருக்கு வித்தியாசமான விளக்கம்! ஸ்டாலினை உருகவைத்த நடிகர் மோகன் பாபுவின் பேச்சு...

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தி.மு.க. சார்பில் புகழஞ்சலி கூட்டம் கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கி, தி.மு.க.செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  ‘மறக்கமுடியுமா கலைஞரை’ என்ற தலைப்பில் நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.               
 
தெலுங்கு நடிகர் மோகன்பாபு பேசும்போது கூறியதாவது:–
 
நான் பிறந்தது ஆந்திரமாநிலம் சித்தோடு பகுதி, எனினும் சென்னையில்தான் சிறுவயது முதல் பள்ளிப்படிப்பையும், கலையுலக பயணத்தையும் தொடங்கினேன். தமிழ்த்தாயின் மடியில் வளர்ந்துதான் இந்த அளவுக்கு வளர்ந்தேன். கலைஞர் கருணாநிதியை எனது வாழ்வில் 4 முறை நான் நேரில் சந்தித்து உள்ளேன். கருணாநிதி தமிழர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பொக்கி‌ஷம்.
 
அவர் திரையுலகில் ஆற்றிய பணியை மறக்க முடியுமா? யாராலும் அழிக்கத்தான் முடியுமா?. பராசக்தி, மனோகரா, மந்திரகுமாரி, மலைக்கள்ளன் என்று பல படங்களில் அவர் எழுதிய அனல்தெரிக்கும் வசனங்களை பார்த்து அசந்து போய் இருக்கிறேன். அவரது கதைவசனத்தில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.
 
மு.கருணாநிதி என்றால், மு-முன்னுதாரணம், க–கருணை, ரு–ருத்ரம், ணா–நாத்திகம், நி–நிதானம், தி–திராவிடம் ஆகும். அண்ணாவுக்கு பின்னர் 50 ஆண்டுகாலம் தி.மு.க.வை தாங்கி பிடித்தவர் கருணாநிதி. மறைந்த அண்ணாவின் இதயத்தில் இடம்பெற்றவர்.
 
அண்ணாவும், கருணாநிதியும் சமூகநீதிக்காக பாடுபட்டார்கள். அதனால்தான் மெரினாவில் சமாதியிலும் அருகருகே ஒன்றிணைந்து இருக்கிறார்கள். உப்பையும், கடலையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல் அண்ணாவையும், கருணாநிதியையும் பிரிக்க முடியாது.
 
கருணாநிதியின் கனவை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். அவர் முதல்–அமைச்சர் ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை."
 
இவ்வாறு அவர் கூறினார்.