தற்காலிக ஓட்டுனர்களால் விபத்து..! அலறும் பயணிகள்..!! முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு..!!
கடலூர் அருகே தற்காலிக ஓட்டுநர் ஒருவர், ஓட்டி சென்ற அரசு பேருந்து, முன்னாள் சென்ற காரின் பின்புறம் மோதியதால் கார் சேதமடைந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். தற்காலிக ஓட்டுனர்களால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து கழகம் ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்ய தற்காலிக ஓட்டுனர் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் என்ற தற்காலிக ஓட்டுநர் கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் பேருந்து நிலையம் வந்து பின்னர் மீண்டும் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றார். அப்போது திருப்பாதிரிபுலியூர் அண்ணா மேம்பாலம் அருகே சென்ற காரின் பின்புறம் பேருந்து மோதியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பேருந்தை கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக பயணிகள் அச்சமடைந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.