புயலே வந்தாலும் பால் விநியோகம் பாதிக்காது! – முன்னேற்பாட்டுடன் ஆவின் மையங்கள்!
வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் மக்களுக்கு அத்தியாவசியமான பால் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து ஆவின் பாலகங்களிலும் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் தயாராக உள்ளதாகவும், நகரின் சிக்கலான பகுதிகளில் நடமாடும் பாலகங்கள் மூலமாக பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.