வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (21:38 IST)

எளிய மனிதர்கள் 'சாகச நாயகர்கள்' ஆன கதை: எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த முதல் மனிதர்

edmund hillary image
டென்சிங் நோர்கே (அப்போது 39) மற்றும் எட்மண்ட் ஹிலாரி (33) வரலாற்றுச் சிறப்புமிக்க எவரெஸ்ட் சிகரத்தை ஏறிச் சென்ற சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படம்
 
எவரெஸ்ட் சிகரத்தில் மனிதன் காலடி வைத்து 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முதன்முதலாக அங்கு சென்று சாதனை படைத்த டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹிலாரி ஆகியோர், தற்காலத்தைய மலையேற்ற வீரர்களுக்கு மிகப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளனர் என அவர்களுடைய மகன்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
 
"அவர்களை உண்மையான முன்னோடிகள் என்றும், மகத்துவம் மிக்க கண்டுபிடிப்பாளர்கள் என்றும் நான் உணர்கிறேன். அவர்களும், அவர்களுடைய குழு உறுப்பினர்களும், தற்போதைய மலையேற்ற வீரர்களுக்கான பாதையை அமைத்துக் கொடுத்தவர்கள் என்பது மட்டுமல்ல மலையேற்றம் என்பதில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள எண்ணற்ற மாற்றங்களுக்கும் காரணமாக இருந்துள்ளனர்," என்கிறார் டென்சிங் நோர்கேவின் மகனான ஜேம்லிங் டென்சிங் நோர்கே.
 
70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நோளில் மே 29ஆம் தேதி அவருடைய தந்தை டென்சிங் நோர்கே உலகின் அதிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்.
 
எவரெஸ்ட் சிகரத்தை அடையும் வரை அவருடன் பயணித்து அவருக்கு அனைத்து உதவிகளையும் அளித்திருக்கிறார் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரரும், பொதுநலப் பணியாளருமான எட்மண்ட் ஹிலாரி.
 
இந்த இரண்டு மலையேற்ற வீரர்களின் மகன்களான ஜேம்லிங் டென்சிங் நோர்கே, பீட்டர் ஹிலாரி ஆகிய இருவரும் தங்கள் தந்தைகளின் சாகசக் கதைகளைக் கேட்டு, அவர்களின் அடியைப் பின்பற்றியே வளர்ந்து எவரெஸ்ட் சிகரத்தையும் அடைந்துள்ளனர்.
 
 
70 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பெருமைமிகு நிகழ்வை நினைவுகூரும் வகையில் அவர்கள் இருவரும், தங்கள் தந்தைகளைப் பற்றி பிபிசியிடம் பேசினர்.
 
"அவர்கள் சாதாரண நபர்களாக எவரெஸ்ட் மலை மீது ஏறினர். ஆனால் பின்னர் உலக சாதனையாளர்களாக அங்கிருந்து திரும்பினர். இருப்பினும், அந்த சாதனையைச் செய்துவிட்டதால் அவர்கள் கர்வப்படவில்லை. எப்போதும் போல சாதாரணமாக, பணிவான மனிதர்களாகவே வாழ்ந்தனர்," எனப் பெருமையுடன் கூறுகிறார் ஜேம்ஸ்.
 
"முன்னெப்போதும் யாரும் செய்யாத ஒரு சாதனையை ஒருவர் செய்யும் போது, மற்றவர்களாலும் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அது விதைப்பதோடு, அவர்களையும் அது போன்ற சாதனைகளை செய்யத் தூண்டுகிறது. இந்தச் சாதனையின் 70ஆம் ஆண்டு நினைவு நாளில் அதை நாம் கொண்டாடுவோம்," என்கிறார் பீட்டர் ஹிலாரி.
 
1953ஆம் ஆண்டு படைக்கப்பட்ட இந்த சாதனை நிச்சயமாக ஒரு மிகப் பெரும் முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது. தற்போது இந்த ஆண்டின் மலையேற்ற காலம் தொடங்கிய முதல் பத்து நாட்களில் 500க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்
 
தொழில்நுட்ப முன்னேற்றம், போக்குவரத்து, தொலை தொடர்புத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. சாட்டிலைட் ஃபோன்கள், ஜிபிஎஸ் போன்ற எந்தவித உதவியுமின்றி அப்போது டென்சிங் நோர்கேவும், எட்மண்ட் ஹிலாரியும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது மிகப்பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
 
தனது தந்தை மற்றும் இளைய சகோதரருடன் ஜாம்லிங், ஆறு முயற்சிகள் தோல்வியுற்ற பிறகும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியைத் தொடர்ந்தார்
 
உண்மையில், அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த செய்தி லண்டனை அடைய மூன்று நாட்கள் ஆகின.
 
அதற்கு முன்பு 30 ஆண்டுகளாக எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்திருந்தன. டென்சிங்கும் அதற்கு முன்பு 6 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்றுள்ளார்.
 
இதில் 1952ஆம் ஆண்டு மேற்கொண்ட முயற்சியின்போது, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துவிட்டதாகவே அவர் நம்பியிருந்தாலும் கடைசியில் அந்தப் பயணமும் தோல்வியில் முடிவடைந்தது.
 
"அவருடைய சிறுவயதில் இமயமலைப் பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அவருக்கு ஏன் இமயமலை மீது மட்டும் பறவைகள் பறப்பதில்லை என்ற ஆச்சரியம் ஏற்பட்டிருக்கிறது," என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் ஜேம்லிங்.
 
"மேலும், புத்த மதத்தைச் சேர்ந்த லாமா எனப்படும் அதிகாரம் மிக்க துறவி ஒருவர், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அந்த சிகரத்தை முதன்முதலில் அடைய முடியும் எனப் பேசியது அவருக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியது," என்கிறார் ஜேம்ஸ்.
 
எட்மண்ட் ஹிலாரி (நடுவில்) மற்றும் பீட்டர் (ஆர்) ஆகியோர் மிங்மா செரிங் போன்ற ஷெர்பா ஏறுபவர்களுடன் நீடித்த உறவைக் கொண்டுள்ளனர்
 
ஒன்பதாவது பிரிட்டிஷ் மலையேற்றப் பயணத்தில் டென்சிங்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டபோது, அது அவருக்கு உலக அளவிலான புகழைப் பெற்றுத் தரும் என அவர் நம்பியதாக அவரது மகன் பீட்டர் சொல்கிறார்.
 
"அவர் எப்போதும் எதிலும் முன்னணியில் இருக்கவே விரும்பினார். ஒரு லட்சியம் மிக்க இளைஞராகவே அவர் விளங்கினார்," என பிபிசியிடம் பேசிய பீட்டர் கூறினார்.
 
"எனக்கு நினைவு தெரிந்த வகையில், இமயமலையின் தென்பகுதியில் உள்ள உச்சிக்குச் செல்ல வேண்டும் என்பது குறித்தும், அங்கிருந்து திபெத் அமைந்துள்ள பகுதிக்குக் கீழே செல்ல வேண்டும் என்பது குறித்தும் அவர் பலமுறை விளக்கியிருக்கிறார்.
 
எவரெஸ்ட் சிகரம் என்பதைத் தாண்டி வேறு ஏதாவது ஒரு சிகரமாக அது இருந்திருந்தால், அந்த சிகரத்தை அடையும் முயற்சியைக் கைவிட்டு விட்டு அடுத்த நாளே அவர் திரும்பியிருப்பார்," எனக் கூறும் பீட்டர், எவரெஸ்ட் சிகரத்தை அவர் அடைந்துவிட முடியும் என அவருடைய உள்ளுனர்வு தொடர்ந்து நம்பிக்கையை ஊட்டியதால்தான் அவர் தொடர்ந்து அந்த சிகரத்தை அடையும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.
 
அவர்கள் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தபோது அங்கு ஆக்ஸிஜன் மிகவும் குறைவாகவே அவர்களுக்குக் கிடைத்தது. இருப்பினும் அங்கே 15 நிமிடங்கள் இருந்துவிட்டு அவர்கள் திரும்பியுள்ளனர்.
 
ஜாம்லிங் டென்சிங் நோர்கே மலையேறுபவர்களின் எண்ணிக்கையால் ஈர்க்கப்படவில்லை. கூட்டம் அதிகரிப்பதால்சாகசத்தின் சிலிர்ப்பு தொலைந்து போவதாக அவர் உணர்கிறார்
 
புத்த மத வழக்கப்படி, டென்சிங் அங்கே சில மிட்டாய்களையும் பிஸ்கட்டுகளையும் புதைத்து வைத்துவிட்டு வந்துள்ளார். எட்மண்ட் ஹிலாரி அங்கே ஏராளமான புகைப்படங்களை எடுத்து வந்தார்.
 
அதில் டென்சிங் இந்தியா, நேபாளம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கொடிகளை அசைத்துக்கொண்டிருந்த புகைப்படமும் இடம்பெற்றது.
 
ஆனால் அவரை அவரே புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்துப் பேசிய பீட்டர், "எனது தந்தை அடிக்கடி சொல்வார். டென்சிங் அப்போது வரை கேமராவை பயன்படுத்தியது இல்லை. மேலும், கேமராவை பயன்படுத்த அப்போது அவர் கற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை," என்றார்.
 
பல தசாப்தங்களுக்குப் பிறகு ஜேம்லிங், பீட்டர் இருவரும் எவரெஸ்ட் சிகரத்திற்குப் பயணம் மேற்கொண்டபோது, அவர்களுடைய தந்தைகள் எவ்வளவு சிரமப்பட்டு அந்தக் கடினமான பனிப்பாறைகளைக் கடந்து சென்றிருக்க வேண்டும் என்பதை நன்றாகவே புரிந்துகொண்டனர்.
 
 
எவரெஸ்ட் உச்சியில் எட்மண்ட் ஹிலாரி எடுத்த டென்சிங்கின் படம்
 
"நான் முதன்முதலாக 1990ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்திற்குப் பயணம் மேற்கொண்டேன். அங்குள்ள செங்குத்தான பனிப்பாறை ஒன்றைப் பார்த்தபோது எனது தந்தையைப் பற்றிய சிந்தனைகளைத் தவிர்க்க முடியவில்லை.
 
எனது தந்தை அங்கே எதைப் பார்த்ததாக என்னிடம் சொன்னாரோ, அதையே நானும் பார்த்தேன். அவருக்கு ஏற்பட்ட அனுபவமே எனக்கும் ஏற்பட்டது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுப் பூர்வமானது," என பிபிசியிடம் பேசிய பீட்டர் தெரிவித்தார்.
 
ஜேம்லிங் 1996ஆம் ஆண்டில் தான் எவரெஸ்ட் சிகரத்திற்கு முதன்முறையாகச் சென்றார். மதரீதியான காரணங்களால் அப்போதுதான் அவரால் அங்கு செல்ல முடிந்தது.
 
அவரது இனமான ஷெர்பா இனத்தவர்கள் எப்போதும் மலையேற்றத்தில் சிறப்பு திறமைகளைப் பெற்றிருந்தனர். ஆனால் இமயமலையை அவர்கள் மிகவும் புனிதமான மலையாகக் கருதியதால் அந்த மலையில் ஏற ஏராளமான சம்பிரதாயங்களைக் கடைபிடிக்க வேண்டியிருந்தது.
 
"அதுவொரு புனிதப் பயணமாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த மலையில் ஏற எனது தந்தை பின்பற்றிய மத நடைமுறைகளை நானும் பின்பற்றவேண்டிய நிலை இருந்தது," என்கிறார் ஜேம்லிங்.
 
தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமானோர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதால், அவர்களுடன் சேர்ந்து மலையேற ஜேம்லிங்கும், பீட்டரும் விரும்புவதில்லை.
 
 
இதற்கிடையே, காமி ரிடா என்ற ஷெர்பா இனத்தைச் சேர்ந்த மலையேற்ற வழிகாட்டி, கடந்த செவ்வாயன்று 28வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து முந்தைய அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
 
அவர் எவரெஸ்ட் சிகரத்திற்கு மேற்கொள்ளும் பயணங்களை தற்போதைக்கு நிறுத்தப் போவதில்லை என்கிறார்.
 
ஏனென்றால், அவர் போட்டியாளராகக் கருதும் பசங் ஷெர்பா என்பவர் இதுவரை 26 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்திருந்தாலும், இன்னும் அதுபோன்ற பயணங்களைத் தொடர்ந்துகொண்டுள்ளார்.
 
லக்பா ஷெர்பா என்ற பெண், பத்தாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து பெண்களில் அதிக முறை இந்த பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட பெருமையைப் பெற்றுள்ளார்.
 
"எனது தந்தையின் காலத்தில் இருந்ததைப் போன்ற சிரமங்கள் தற்போது இல்லை. ஏராளமான தொழில்நுட்ப வளர்ச்சி, வசதிகள் இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகள் நமக்குப் பெரும் உதவியாக இருக்கின்றன.
 
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பின் திரும்பும்போது இரண்டாவது தங்கு முகாமில் இருந்து சிலர் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவுக்கு செல்கின்றனர். இதுபோல் அனைத்து பயண வழிகளும் தற்போது கிடைத்துள்ளன.
 
மலையேறுபவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் ஷெர்பாக்கள் கொண்டு செல்கின்றனர். அதனால் ஒரு சாகசப் பயணத்தைப் போன்ற அனுபவமே கிடைப்பதில்லை. அது வெறும் புகைப்படம் எடுப்பதற்கான பயணமாக மாறிவிட்டது. மலையேற்றத்தை அனுபவித்து யாரும் பயணத்தை மேற்கொள்வதில்லை," என்கிறார் ஜேம்லிங்.
 
இதை ஓரளவுக்கு மட்டுமே பீட்டர் ஒப்புக்கொள்கிறார்.
 
"எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பயணத்தின் தொடக்கத்தில் உள்ள முகாமில் இருந்தே பாதுகாப்புக் கயிறு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
 
எங்கு எந்த ஆபத்து வந்தாலும், அதிலிருந்து மலையேற்ற வீரர்களைக் காப்பாற்றி விடுவார்கள். 6,300 முதல் 6,500 மீட்டர் உயரத்தில் ஆபத்து ஏற்பட்டால்கூட ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 
ஒவ்வொரு முகாமிலும் சூடான தேனீருடன் ஷெர்பாக்கள் இருக்கின்றனர். இருப்பினும் எப்போதும்போல அதுவொரு மிகப் பெரிய மலையாகவே இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்வது கடும் சவால்கள் நிறைந்தது," என்கிறார் அவர்.
 
100 ஆண்டுகளில், மலையேற முயன்ற 300 பேர் உயிரிழந்த நிலையில், உண்மையில் எவரெஸ்ட்டை ஏறுவது கடினமான செயல் என்பதை மறுக்க முடியாது. இந்த மலையேற்ற சீசனில்கூட இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
"இயற்கையை மதிக்க வேண்டும் என்ற பாடத்தை இமயமலை நமக்குக் கற்றுத் தருகிறது," என்று கூறும் ஜேம்லிங், இந்தப் பூமியில் நாம் வெறும் விருந்தினர்கள்தான் எனக் கூறி முடித்தார்.