வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (09:15 IST)

காதலனுடன் செல்வதாக அடம்பிடித்த மகள்... போலீஸ் ஸ்டேசனில் விஷம் குடித்த தந்தை

ஆத்தூர் அருகே காதலனுடன் செல்வேன் என மகள் அடம்பிடித்ததால், அவரது தந்தை போலீஸ் ஸ்டேசனிலேயே விஷம் குடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கார்த்திக்குமார் (வயது 26). பி.சி.ஏ. படித்துள்ளார்.
 
இவருக்கும் ராசிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வரும் சூர்யா (22) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு வந்ததால்,  வீட்டை விட்டு வெளியேறினார்கள். கார்த்திக்குமார் - சூர்யா இருவரும்  கொடுமுடியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
 
பின்னர் அவர்கள் நேற்று பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 
அப்போது சூர்யாவின் தந்தை ரங்கசாமி, தாய் சுமதி, சகோதரர் வீரப்பன் ஆகியோர் எங்களது பெண்ணை எங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் நாங்கள் 3 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டினார்கள்.
 
 
ஆனாலும் சூர்யா இதற்கு மசியவில்லை. காதல் கணவருடன் தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தார்.
 
இதனால் மன வேதனை அடைந்த சூர்யாவின் தந்தை ரங்கசாமி போலீஸ் நிலையத்திற்கு வெளியே வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்த அவரது மனைவி சுமதியும் வி‌ஷம் குடிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அந்த வி‌ஷ பாட்டிலை தட்டி விட்டனர்.
 
இதையடுத்து போலீசார் 2 பேரையும் மீட்டு ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சூர்யா பெற்றோருடன் செல்ல மறுத்ததால் அவரை காதல் கணவர் கார்த்திக்குமாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.