செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஜூலை 2025 (09:35 IST)

உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய அதிகாரிகள்.. வீடியோ வைரலானதால் அரசு எடுத்த அதிரடி முடிவு..!

உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய அதிகாரிகள்.. வீடியோ வைரலானதால் அரசு எடுத்த அதிரடி முடிவு..!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் உள்ள கலி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது சில அதிகாரிகள் திருடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து, அந்த கோயிலை கர்நாடக அரசே தன் வசப்படுத்தி கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கலி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் காணிக்கை எண்ணும்போது, ஒரு அதிகாரி பணக்கட்டுகளைத் தன்னுடைய பாக்கெட்டில் போடும் காட்சியும், அதே நபர் இன்னொருவரிடம் பணக்கட்டுகளை கொடுப்பதாக வெளிவந்த காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேறு சில வீடியோக்களும் இதேபோன்று வைரல் ஆனதை அடுத்து, கோவில் அதிகாரிகளின் ஊழலை தடுக்கும் வகையில் கர்நாடக மாநில அரசு, பெங்களூரில் உள்ள கலி ஆஞ்சநேய சுவாமி  கோயிலை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
 
கர்நாடக இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை சட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்து மதம் மற்றும் அறக்கட்டளைத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். "ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வோம் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்தக் கோவிலின் நிர்வாகத்தை முழுமையாக சீர் செய்துவிட்டு, அதன் பிறகு மீண்டும் கோயில் நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் ஒப்படைப்போம்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே கடந்த பா.ஜ.க. ஆட்சியில் அரசு 8 கோயில்களை கையகப்படுத்தியதாகவும், அந்த முறைகேடுகளையும் தீர்த்துவிட்டு அனைத்து கோயில்களையும் மீண்டும் அறக்கட்டளையிடம் ஒப்படைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோயில் பணத்தை அறங்காவலர் அதிகாரிகள் திருடியதால், கர்நாடக அரசு அந்த கோயிலை தான் வசப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva