பெண் ஊழியர் மீது கார் மோதி விபத்து
கரூர் அப்போலோ மருத்துவமனை பெண் ஊழியர் மீது கார் மோதி விபத்து – மனிதாபிமானத்தோடு மருத்துவமனை சேர்த்த போக்குவரத்து காவலர், எஸ்.ஐ மற்றும் தனித்துணை ஆட்சியரின் டிரைவர் குவியும் பாராட்டு.
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியேறும் பகுதியில், 40 வயது பெண்மணி ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் அப்பகுதி வழியாக ஒரு சொகுசு கார் சென்ற போது அவர் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் போக்குவரத்து காவலர் மற்றும் கரூர் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் அவ்வழியாக வந்த தனித்துணை ஆட்சியரின் டிரைவர் வாகனங்களை நிறுத்தி விட்டு, அப்பெண்மணிக்கு மருத்துவ உதவி மற்றும் கூட்ட நெரிசலில் இருந்து அப்பெண்மணியை காப்பாற்றியதோடு, முதலுதவி கொடுத்து ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பெண்மணியின் பெயர் அபர்ணாதேவி என்பதும், அவர் கரூர் அப்போல்லோ மருத்துவமனையில் பணியாற்றுவதும் தெரியவந்ததது. மேலும், வடக்கு காந்திகிராமத்தினை சார்ந்த அவர் தற்போது கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உற்ற நேரத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் என்கின்ற தத்துவத்தின் கீழ், முன் பின் தெரியாத ஒரு 40 வயது பெண்மணிக்கு போக்குவரத்து காவலர், உதவி ஆய்வாளர் மற்றும் தனித்துணை ஆட்சியரின் டிரைவர் ஆகியோர் உதவிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.