1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (18:30 IST)

47 வது புத்தக கண்காட்சி தொடக்கம்..! மிகப்பெரும் வெற்றி அடையட்டும் என முதல்வர் வாழ்த்து..!!

book fair
47-வது புத்தக கண்காட்சி சென்னையில் தொடங்கிய நிலையில், புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 
பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைத்து,  கலைஞா் பொற்கிழி விருதுகள்,  பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க முடியாததால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் காட்சியை திறந்து வைத்தார்.  அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடனிருந்து புத்தக காட்சியை பார்வையிட்டனர்.  தொடர்ந்து,  கலைஞா் பொற்கிழி விருதுகள்,  பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
 
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரையை வெளியிட்டுள்ளார்.  அதில், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சியை நேரில் வந்து தொடங்கி வைக்க இருந்த நிலையில்,  தவிர்க்க இயலாத காரணங்களால் அது இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
 
47-ஆவது சென்னை புத்தகக் காட்சி நிகழ்வு மிகப் பெரும் வெற்றியடையவும் எனவும் அதிக அளவிலான புத்தகங்கள் விற்பனையாகவும் வாழ்த்துகிறேன் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
 
சென்னை புத்தகக் காட்சியைப் போல தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் அடுத்ததாகத் தமிழ்நாடு அரசு எடுத்த மிக முக்கியமான முயற்சி என்பது பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.  உலகளாவிய அறிவுப் பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு நமது செழுமையான தமிழ் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுக்க எடுத்துச் செல்லவும் சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று தமிழில் அவற்றை வழங்கவும் நடத்தப்படுகிற இந்தப் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு 38 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 6  கோடி ரூபாய் செலவில் இது நடைபெற இருக்கிறது என்று முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.