ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (14:59 IST)

4 வயது குழந்தையை கொன்ற தாய்:வாலாஜாவில் பரபரப்பு

வாலாஜாவில் 2 ஆவது கணவருடன் சேர்ந்து, பெற்ற குழந்தையை, தாய் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவியின் பெயர் காவ்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தருண் என்ற 4 வயது குழந்தையும் இருந்தது.

மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த ராமச்சந்திரன்-காவ்யா தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காவ்யா கணவரை பிரிந்து குழந்தையுடன் ராணிபேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு காவ்யா, ராணிபேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்போது ராணிபேட்டை குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அதன் பின்பு இரண்டு ஆண்டுகள் தீவிரமாக காதலித்த இருவர், கடந்த ஜனவரி மாதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். குழந்தை தருணுடன்  காவ்யாவும் அவரது காதலரும் சேர்ந்து குடும்பம் நடத்திவந்தனர்.

இந்நிலையில் குழந்தை தருண், அவர்கள் இருவருக்கும் இடைஞ்சலாக இருப்பதாக நினைத்தனர். பின்பு குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொலை செய்ய முடிவு எடுத்தனர். கடந்த 10 ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள வீட்டை காலி செய்து வாலாஜாவில் வீடு எடுத்து தங்கினர்.

கடந்த 13 ஆம் தேதி மாலை, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தருணை, காவ்யாவும் தியாகராஜனும், சில்வர் அண்டாவில் உள்ள தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து கொன்றனர்.

இதனையடுத்து குழந்தையை அரிசி மூட்டையில் கட்டி வைத்து அன்று இரவு, தியாகராஜன் மூட்டையை கொண்டு சென்று ஆற்காடு பாலாற்றில் பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்தார்.

இந்நிலையில் நேற்று காலை காவ்யாவின் தாய் காவ்யாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் குழந்தை தருணை பற்றி காவ்யாவிடம் கேட்டுள்ளார்.

காவ்யா மழுப்பலாக பதில் கூறிய நிலையில் அவரின் தாயார் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் காவ்யா குழந்தையை கொன்ற விசயத்தை கூறிவிட்டார்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அதியமானிடம் காவ்யா சரணடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஆகியோர் காவ்யாவை கைது செய்தனர்.

பாலாற்றில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க போலீஸார் முடிவு எடுத்துள்ளனர்.

காவ்யாவின் காதலர் தியாகராஜன் தலைமறைவாகி விட்டதால் அவரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. மேலும் அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

வாலாஜாவில் 4 வயது குழந்தையை கொன்று புதைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.