வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 1 மே 2024 (13:46 IST)

விருதுநகர் வெடி விபத்தில் 4-பேர் பலி..! உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைப்பு..!

Bomb Blast
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி  அருகே கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்குவாரி உரிமையாளர் தலைமறைவான நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான RSR குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகளை தகர்க்க வெடி மருந்துகளை இறக்கி வைக்கும் போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
 
இதில், வெடி பொருளை இறக்கி வைத்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  தொழிலாளர்களை மீட்கும் பணியில் 30 தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடி மருந்துகள் இன்னும் இருப்பதால் எப்போது வேண்டுமானால் மீண்டும் வெடி விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது.
 
வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. இதேபோல் வெடிபொருள்கள் கொண்டுவந்த வேன் இந்த விபத்தில் உருக்குலைந்து. சுமார் இரண்டு கி.மீ தூரம் வரை வெடிபொருட்கள் வெடித்த சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
 
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் எவ்வளவு வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்தும்,  வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடம்பன்குளம், ஆவியூர், உப்பிலிக்குண்டு கிராம மக்கள் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பததாக தெரிவித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

 
இந்நிலையில் கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதால் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர் தினத்தன்று வெடி விபத்தில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.