முதல்வர் விஜய் கடிதம், அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எதிரொலி: இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறைவைக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் அபராதத்துடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 11 மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களது விசைப்படகும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குத் தமிழக முதல்வர் விஜய் தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வரின் இந்தத் தொடர் தூதரக முயற்சியைத் தொடர்ந்து, இவ்வழக்கு ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 11 மீனவர்களையும் இலங்கை மதிப்பில் தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்தும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மீனவர்கள் மீட்கப்பட்டுள்ள செய்தி அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்கவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவ அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
Edited by Siva

