மழை வெள்ளத்தில் இருந்த மீண்டது சென்னை: 22 சுரங்கப்பாதைகளும் சீர்!
சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல்.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்நிலையில் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக சென்னையில் உள்ள 22 சுரங்க பாதைகளில் தற்போது 18 சுரங்கப்பாதைகள் சீர்செய்யப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 பகுதிகளில் 750 இடங்களில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 25 முதல் நவம்பர் 14 வரை முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.