ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (13:33 IST)

183 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட மொத்தம் 183 மருத்துவமனைகளில் இன்று கொரோனா தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
 
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு குறித்து ஒத்திகை மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வந்தால் அணுக தேவையான மாதிரி புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, சிகிச்சைக்கு பின் நோயாளிகளை கண்காணிப்பில் வைக்கும் சாதாரண வார்டு உள்ளிட்டவை தற்காலிகமாக அமைக்கப்பட்டது. 
 
அதன்படி, திடீரென தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் அனுமதியானால், அவரை அணுக வேண்டிய நடைமுறை, சிகிச்சை குறித்து வழிகாட்டுதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். இதில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா, மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர். மேலும், கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 92 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 183 மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 
இது குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களிடம் கூறியதாவது: அரசாணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா ஒத்திகை நிகழ்ச்சி இன்று, நாளை நடக்கிறது. இன்று கோவை அரசு மருத்துவமனையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டேன். இதில், 
கொரோனா வரும் போது எப்படி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் 13 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் 113 கொரோனா கேஸ் ஆக்டிவ் நிலையில் உள்ளது. கோவையில் பெரியளவில் கொரோனா பாதிப்புகள் இல்லை. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். 
 
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 300 முதல் 400 பேருக்கு
கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகள் தேவைக்கு ஏற்ப உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.