1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக சேவையாற்றியவருக்கு பெரியார் விருது

திராவிடர் கழகத்தின் சார்பில் 2014 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக பணியாற்றிய பிரியா பாபுக்கு வழங்கப்படுகின்றது. திராவிடர் கழக வரலாற்றில் பெரியார் விருது பெறும் முதல் திருநங்கை பிரியா பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
FILE

காட்டில் வாழும் ஐந்தறிவு படைத்த கொடிய மிருகங்கள் கூட தங்களின் இனத்தை சேர்ந்த இதர மிருகங்களை காயப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ விரும்புவதில்லை.

ஆனால், ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்று தற்பெருமை பேசி வரும் மனித குலத்தை சேர்ந்த நாம் மட்டும் தான் நம்மில் ஒரு பிரிவினரை குறைந்தபட்சம் 100 அடையாள பெயர்களால் அழைத்து, தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரையும் குத்தி மனித சமுதாயத்தை விட்டு காலகாலமாக விலக்கியே வைத்துள்ளோம்.

க்ரோமோசோம்களின் குளறுபடியினால் விளைந்த (எதிர்) வினைபயனாகவும் மூன்றாம் பாலின மனிதப்பிறவிகளாக இந்த பூமியில் பிறந்து விட்ட திருநங்கையர்கள், உலகம் முழுவதும் மக்களால் புறக்கணிக்கப்படுவதுடன், அற்ப புழுக்களாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர்.

தாங்கள் செய்யாத தவறுக்கு தேவையற்ற தண்டனையை அனுபவித்து வரும் திருநங்கையர்கள், காலகாலமாக அடைந்து வரும் வேதனையும், அனுபவித்து வரும் இன்னல்களும் சொல்லில் அடங்காத - சொன்னால் விளங்காத - சொல்லி விளங்கிய பின்னரும், யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத துயர தொடர்கதை என்றால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு அல்ல.

இந்நிலையில், இவர்களின் இழிநிலையை மாற்றி, உயர் நிலைக்கு ஏற்றும் அரிய முயற்சியில் பிரியா பாபு என்பவர் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் அரிய சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் 'பெரியார் விருது' வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த 2014 ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலில் பிரியா பாபுவும் இடம் பெற்றுள்ளார்.

திருநங்கை சமூகம் மேம்பாடு எய்த போராடியதற்காக மதிப்பிற்குரிய இவ்விருதினை பெறும் பிரியா பாபு, பாரதிதாசன் பல்கலைகழகம் வழங்கிய பெரியார் விருதினை 2012 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். அதே ஆண்டு ஒரு பிரபல வாரப் பத்திரிகையின் டாப்-10 மனிதர்களில் ஒருவராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை பெரியார் திடலில் வரும் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் விழாவில் இவருக்கு 'பெரியார் விருது' வழங்கப்படுகிறது. திராவிடர் கழக வரலாற்றில் பெரியார் விருது பெறும் முதல் திருநங்கை பிரியா பாபு என்பது குறிப்பிடத்தக்கது.