சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
சாலையோர புளியமரத்தில் கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அம்மன்கோவில்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 45), லாரி டிரைவர். இவரது மனைவி மலர்விழி (35). இவர்களுக்கு வசந்த் (14) என்ற மகனும், வசிகா (12) என்ற மகளும் உள்ளனர். வசந்த் 9 ஆம் வகுப்பும், வசிகா 6 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். மலர்விழி போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை தேனி மாவட்டம் உப்புதுறை என்னும் இடத்தில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல காட்டுராஜா முடிவு செய்தார். அதன்படி காட்டுராஜா குடும்பத்தினரும், அவருடைய மாமனார் பழனி (55), மாமியார் பத்மா (47) மற்றும் மலர்விழியுடன் பணிசெய்து வந்த வடமலம்பட்டியைச் சேர்ந்த செந்தாமரை (48), பாரூர் அருகே உள்ள நாகர்கோவிலை சேர்ந்த ராஜேந்திரன் (46) ஆகியோரும் ராஜேந்திரனுக்கு சொந்தமான காரில் புறப்பட்டனர். காரை ராஜேந்திரன் ஓட்டினார்.அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் இரவு ஊருக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுப்புலியூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென, ராஜேந்திரனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சாலையின் வலதுபுறம் நின்ற புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.இதனால் காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி மரண ஓலமிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் காரை ஓட்டி வந்த ராஜேந்திரன், முன் சீட்டில் இருந்த காட்டுராஜா, அவரது மனைவி மலர்விழி, மாமனார் பழனி, மாமியார் பத்மா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின் சீட்டில் இருந்த வசந்த், வசிகா மற்றும் செந்தாமரை ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாரூர் காவல்துரை ஆய்வாளர் முருகேசன், போச்சம்பள்ளி ஆய்வாளர் முருகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.விபத்து பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது. பலியான ராஜேந்திரனுக்கு விஜியா (37) என்ற மனைவியும், மோகனப்பிரியா (17), சண்முகப்பிரியா (16) என்ற மகள்களும், பாரதி (10) என்ற மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து பாரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த காட்டுராஜா, அவரது மனைவி மலர்விழி, மாமனார் பழனி, மாமியார் பத்மா ஆகிய 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு சென்று திரும்பியவர்கள், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அம்மன்கோவில்பதி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.