1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மனோதத்துவம்
Written By Murugan
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2015 (18:27 IST)

மனநோயின் அறிகுறிகள்

மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது.


 
 
நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே. 
 
ஒருவரின் சிந்தனைத் திறன் என்பது வயதிற்கேற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.
 
குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர்.
 
சிறு குழந்தைகளே கூட, சற்றே அதட்டலாகப் பேசினால், அவர்களின் முகபாவம் மாறிவிடுவதைப் பார்க்கிறோம். மிகவும் நம்பிக்கொண்டிருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு பொருளோ அல்லது பதவியோ கிடைக்காமல் போனால்கூட சிலருக்கு ஒருவித மன அழுத்தம் உருவாகக்கூடும். 
 
நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், அதாவது தாயோ - தந்தையோ மரணம் அடைந்தால் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாத துயரின் காரணமாகக்கூட சிலருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு. ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்துவிட்டு அவர்கள் மறைந்துவிடும் போதோ அல்லது அகால மரணம் ஏற்படும்போதோ இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது.
 
மனஅழுத்தமும், மனநோயும் தொடர்புடையது என்று ஏற்கனவே பார்த்தோம். நரம்புமண்டலத்தில் கட்டளைகளாக பதிவாகும் விஷயங்கள், நிறைவேறாமல் போகும்போதே பெரும்பாலானோருக்கு மனநோய் ஏற்படுகிறது.
 
இன்னும் சிலர், கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பதால் அதிகளவில் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு பின்னர் அது மூளையின் சொல்படி நடக்காமல் போவதாலும் மனநோய்க்கு ஆளாகின்றனர்.
 
அரிய நிகழ்வாக, அதிகளவு புத்தகப்புழுவாக இருப்பதால், சிந்தனை பாதிப்புக்குள்ளாகி மனஅழுத்த நோய்க்கு ஆளானவர்களையும் பார்க்கிறோம்.
 
எனவே மனநோய் எந்தமாதிரி, எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதை விடவும், அந்த நோய் ஏற்பட்டு விட்டால்,. அதனை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்.
 
முதலில் ஒருவருக்கு மனநோய் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?
 
அதிகநேரம் - அதாவது மணிக்கணக்கில் - நாள்கணக்கில் தனிமையில் இருப்பது, யாருடனும் பேசாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தல், சம்பந்தமின்றி தானாகப் பேசுதல் அல்லது புலம்புதல் போன்றவை இந்நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் எனலாம்.
 
நோயின் தன்மையைப் பொருத்து அறிகுறிகளும் வேறுபடலாம். சிலர் அதிக நேரம் தண்ணீரை திறந்து விட்டு குளித்துக் கொண்டேயிருப்பர். வேறு சிலர் குளிக்கவே மாட்டார்கள். இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.
 
முதலில் மனநோய் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்.
 
அவர்களின் அறிவுரைப்படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மனோதத்துவ நிபுணர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கவுன்சலிங் எனப்படும் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது. 
 
நோயாளியுடன் மருத்துவ நிபுணர் பேசுவதால், பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோயின் தீவிரத்தை அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்.