1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சமூக அவல‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2016 (15:54 IST)

சுப்ரமணிய சுவாமி! - ஒரு சித்தன் கோமாளி ஆன கதை

சுப்ரமணிய சுவாமி! இந்த பெயரைக் கேட்டாலே கட்சி வேறுபாடு இன்றி சிலருக்கு கலக்கம் வரும், சிலருக்கு எரிச்சல். முதலமைச்சர் ஜெயலலிதா, திமுகவின் எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா, தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ, முன்னாள்  மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் என பல உதாரணங்கள் கூறலாம்.
 

 
ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஹார்வர்ட் மற்றும் டெல்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசியராக பணியாற்றியவர். முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் வலம் வந்தவர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் அமைச்சரவையின் போது கேபினட் அமைச்சர்களுக்கு இணையான வாரிய தலைவர் பதவியும், தேசிய திட்ட கமிஷன் உறுப்பினராகவும் வலம் வந்தவர். அவர் ராஜ்ய சபா நியமன உறுப்பினர் ஆன பிறகும் கூட, தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக பதிவு செய்கிறார்.
 
அறிவுஜீவி சுவாமி அவர்களே! எங்களின் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர் சிகிச்சையில் இருக்கிறார், தமிழகத்தில் ISIS, LTTE, நக்சல்கள், திராவிட கழகத்தால் சட்ட ஒழுங்கில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, சட்டவிதி 356ஐ [Article 356] பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியவரே!
 
கொஞ்சம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டுங்கள். முன்னாள் பிரதமர் இந்திராவின் எமெர்ஜென்சி காலத்தின் போது ,அரசியல் தலைவர்கள் சிறையில் இருந்த போது இந்திராவிற்கு  பயந்து  அமெரிக்காவிற்கு  ஓடியவர் தானே நீங்கள்!
 
அறிவுஜீவி சுவாமி அவர்களே! சபை நாகரிகம் தெரியாமல், எனக்கு மத்திய நிதியமைச்சர் பதவி தந்தால் அருண் ஜெட்லீயை விட சிறப்பாக பணியாற்றுவேன் என்று பிதற்றி கொண்டவர் தானே நீங்கள்! தென் மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய நீங்கள் ஈழ யுத்தத்தை முன் எடுத்த ராஜபக்க்ஷேவின் நண்பர் தானே நீங்கள்!
 
அறிவுஜீவி சுவாமி அவர்களே, ஒட்டு மொத்த தமிழகமும் காவேரியில் நமக்கு உள்ள உரிமை பற்றி பேசி வரும் நிலையில், தமிழகம், கர்நாடகத்திலிருந்து வரும் காவேரியை நம்பி இருக்கக் கூடாது; கடல் இருக்கிறது; கடல் நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டுமெனச் சொன்ன உண்மை தமிழன் தானே நீங்கள்!
 
நீதிமன்றம் வரை சென்று சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியவர் தானே நீங்கள்! சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக உரிமை இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று உயர்நீதிமன்றம் சொன்னபோது தீட்சிதர்களின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியவர் தானே நீங்கள்!
 
இந்திய முஸ்லிம்களின் வாக்குரிமை பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைக்காக தேசிய சிறுபான்மை ஆணையம் உங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய சொன்னது தானே சுவாமி அவர்களே! ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கோடைகால பயிற்சி ஆசிரியர் பணியிலிருந்து திரும்பி அனுப்பியது தானே சுவாமிஜி!
 
நீங்கள் கோமாளித்தனமான கருத்துக்கள் சொல்லும் போதெல்லாம் சகோதரி தமிழிசை சொல்லுவார், அது அவர் சொந்த கருத்து, அதில் தமிழக பிஜேபி உடன்பாடு இல்லை என்பார். கண்டன குரல் எழும் அவ்வளவுதான்.
 
ஆனால் சீமானும் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதியும் உங்களுக்கு எதிராக செய்த பதிவுகள் மட்டும் சிறப்பானவை. தமிழன் தொடர்ந்து உங்களின் கோமாளித்தனமான கருத்துக்கள் சகித்து கொள்ளுவான் என்று மட்டும் கனவு காணாதீர்கள் சுவாமி ஜி!

கட்டுரையாளர்:

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை.