நவராத்திரி: முதல் நாள் பூஜை முறைகள்...!
நவராத்திரியின் முதல் நாளான இன்று நவ சக்திகளில் ஒருவரான மகேஸ்வரியை பூஜித்து வணங்க வேண்டும். புரட்டாசி பிறந்தால் புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி. கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது இல்லத்தில் அம்பிகை வழிபாட்டை நடத்தினால் இல்லத்தில் நல்லது நடக்கும் என்பது நமது மூதாதையரின் நம்பிக்கை. அதன்படி நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இன்று மகேஸ்வரிக்கு உகந்த நாள்
கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது. மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.
பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார். அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.
கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்:
காலை 6.15 - 7.15 மணி, 9.15 - 10.15 மணி.
மாலை 4.45 - 5.45 மணி, 7.30 - 8.30 மணி.
கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.
வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி: பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.