ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மருத்துவ குணங்கள் கொண்ட வெற்றிலை எதற்கெல்லாம் பயன்படுகிறது...?

வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு,  சிறுநீர் பெருக்கியாகவும் இருக்கிறது. 
வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. 
 
வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு  கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். 
 
வெற்றிலை ரசம் செய்ய தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு. ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர்  இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
 
வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து  பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
 
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும். குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை  மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
 
வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
 
குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக  மலம் கழியும்.
 
குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி  வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
 
வாயு தொல்லையை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம்,  பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல்  இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.