பயன்தரும் மூலிகைகளும் அதன் அற்புத பயன்களும் !!
கோவை இலை: 1 பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லியாகக் காய்ச்சி காலை, மாலை குடித்து வர உடல்சூடு, கண்ணெரிச்சல் ஆகியவை தீரும். 2 பச்சைக் காயை தினமும் சாப்பிட்டு வர மது மேக நோயைத் தடுக்கலாம்.
கோபுரந்தாங்கி: இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமுறக் காய்ச்சி தலை முழுகி வர தலைமயிர் உதிர்தல் நிற்கும். வேரை உலர்த்திப் பொடி செய்து சமன் கற்கண்டு பொடி கலந்து காலை, மாலை ½ தேக்கரண்டி நெய்யில் சாப்பிட்டு வர எலும்பு, நரம்பு, தசை ஆகியவை வலுப்படும்.
கற்பூரவல்லி: இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல். தொண்டைச் சதை வளர்ச்சி குணமாகும். இலைச்சாறுடன், சர்க்கரை, நல்லெண்ணெய் இவற்றை நன்கு கலந்து நெற்றியில் பற்றிட தலைவலி நீங்கும். இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.
ஓரிதழ் தாமரை: இலையை நாள்தோறும் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர 40 நாளில் தாது இழப்பு, வெட்டைச்சூடு, பலவீனம் ஆகியவை தீரும். இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இவை மூன்றையும் 1 பிடி அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் கலந்து 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை புண், வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும்.
கொட்டைக்கரந்தை: கொட்டைக் கரந்தை சூரணத்துடன் கரிசலாங்கண்ணி சூரணம் சமன் கலந்து தேனில் குழைத்து சாப்பித இளநரை தீரும். கொட்டைக் கரந்தைப் பொடி 5 கிராம் சிறிது கற்கண்டு பொடி கலந்து சாப்பிட வெள்ளை தீரும். நீண்ட நாள் சாப்பிட மூளை, இருதயம், நரம்பு ஆகியவை பலப்படும். கரப்பான் குணமாகும்.