இயற்கையான முறையில் வீட்டு வைத்தியத்தில் பலன் கொடுக்கும் கற்பூரவல்லி....!

கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி நன்றாக வளரும். இதை வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட வளர்த்து உடனடி  நிவாரணத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.
சளி, கபத்திற்கு அருமருந்தான இந்த மூலிகையை பற்றி அகத்தியர் கற்பாறை யத்து நெஞ்சில் கட்டு கபம் வாதம் போம் என்று  பாடியிருக்கிறார். 
 
பயன்தரும் பாகங்கள் - தண்டு, இலைகள் ஆகியவை. இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும்.
 
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீரும். கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள்  கரையும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும்.
 
கற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து  வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
 
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு  மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
 
வீட்டு வைத்தியத்தில் ஜலதோஷம், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1/2 தேக்கரண்டி தேனுடன்  உண்டால் நிவாரணம் கிடைக்கும். 
 
ஒரு இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும். சிறுநீரக நோய்கள், சிறுநீரக கற்கள் ஆஸ்துமா இவற்றுக்கும் நல்ல மருந்து.
 
இலைகள் பரவலாக, அஜீரணம், ஜலதோஷம், கபம், சளி இவற்றை நீக்க குழந்தைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. சிறு பூச்சிக்கடிகள், ஒவ்வாமையால் தோலில் உண்டாகும் தடிப்புகள், எரிச்சல் இவற்றுக்கு இலைச்சாறு தடவப்படுகிறது.
 
கற்பூரவல்லி இலைகளை தேங்காய், பருப்பு, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சட்னியாக செய்து சாப்பிடலாம். 
 
உடலின் சளி நீங்க, இலைகளை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து ஏலக்காய், கிராம்பு (சிறிதளவு) மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து 3 நாட்களுக்கு தினசரி 2 வேளை பருகி வரவும்.


இதில் மேலும் படிக்கவும் :