1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (17:04 IST)

செடி முழுவதும் மருத்துவகுணம் கொண்ட தும்பை பூ !!

தும்பை பூ செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது. நாள்பட்ட மார்பு  சளி  குறைக்க கூடியது தும்பைப்பூ. தும்பை பூவை சட்னியாக செய்து சாப்பிட்டால் மார்புச்சளி நீங்கும்.


தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. எந்த விதமான விஷ பூச்சிகள், விஷ ஜந்துக்கள் கடித்தாலும் தும்பைப்பூவும், தும்பை இலையும் அதன் விஷத்தை முறித்து விடும்.

தும்பைப்பூ மற்றும் தும்பை இலைகளை சம அளவு எடுத்து சுத்தம் செய்து, அம்மியில் வைத்து நசுக்கி சாறு எடுத்து, அந்தச் சாற்றில் கால் அவுன்ஸ் வடிகட்டி குடிக்க வேண்டும். அதே பூவையும், இலையையும் அரைத்து பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் விஷம் முறிந்துவிடும்.

தும்பைப்பூவை சுமார் 50 கிராம் அளவில் சேர்த்து இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெய்யில் போட்டு தைலமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்தத் தைலத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி, தலைபாரம், தலை நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன நீங்கும்.

உலர்ந்த தும்பைப் பூ 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம், பூண்டு, சித்தரத்தை ஆகியவை தலா 10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அனைத்தையும் நன்றாக இடித்து, கால் லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மூக்கடைப்பு தோன்றும்போது இந்த எண்ணெய்யில் 2 துளிகள் மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சதை வளர்ந்திருந்தாலும் மறையும்.

தலைவலி, தலை பாரம் குணமாக சிறிதளவு தும்பைப் பூவைச் சேகரித்து, அதனை பசும்பால் விட்டு அரைத்து ஒரு துணியில் தடவி, அதை நெற்றிப் பொட்டின் மீது வைத்தால் தலைவலி குணமாகும். நெற்றியிலும் துணியைப் போட்டு வைத்து தலைபாரம் இறங்கும்.