1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு உதவும் பீர்க்கங்காய்...!

காய், கனிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து நோயற்ற வாழ்வுக்கு வழித் துணையாய் அமைகின்றன. உள்ளுறுப்புகளுக்கு ஊட்டம் தந்து உற்சாகத்துடன் செயல்படச் செய்கின்றன. 
பச்சைக் காய்கறிகள் ரத்த நாளங்களில் குறிப்பாக இதயத்தைச் சார்ந்த ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்றன. 
 
பீர்க்கங்காய் சர்க்கரை நோயையும், புற்று நோய்களையும் இதயம் மற்றும் இதய நாளங்களில் ஏற்படும் நோய்களையும் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றதாகவும் விளங்குகிறது. 
பீர்க்கங்காய் மித வெப்பமான சீதோஷ்ண நிலையில் வளரக் கூடிய ஓர் கொடி வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். பீர்க்கங்காய் ஓர்  மலமிளக்கியாக மட்டுமின்றி வயிற்றைக் கழியச் செய்வதாகவும் விளங்குகிறது. சிறுநீரைப் பெருக்கிச் சீராக வெளித்தள்ள வைப்பது,  வீக்கங்களைக் கரைக்க உதவுகிறது.
 
மண்ணீரலின் வீக்கத்தை தணிக்க வல்லது. இருமலைப் போக்க வல்லது. ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் நோயைத் தணிக்க வல்லது. பீர்க்கங்காயின் விதைகள் வாந்தியைத் தூண்டக் கூடியது. சளியை உடைத்துக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது.
 
பீர்க்கங்காய் ஓர் சத்தான உணவாவது மட்டுமன்றி அதில் நிறைய நார்சத்து பொதிந்துள்ளது. விட்டமின் பி2, விட்டமின் சி, கரோட்டின், நியாசின், இரும்புச்சத்து, சிறிதளவு அயோடின் மற்றும் புளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.
 
பீர்க்கங்காய் இனிப்புச் சுவையுடைது என்பதும் மட்டுமின்றி எளிதில் சீரணமாகக் கூடியது. உடலுக்குக் குளிர்ச்சி தர வல்லது. குறைந்த அளவு  எரி சக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக உகந்த உணவாகின்றது. 
 
பீர்க்கங்காய் மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு ஓர் நல்ல உபகரணமாக உதவுகின்றது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் இதற்கோர் முக்கிய காரணமாகும்.