1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில் இத்தனை நன்மைகளா...?

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது. உணவை செரிப்பிக்கிறது. சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும். இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது. பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.
 
இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.
 
நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
 
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும். இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.
 
பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.