நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடலில் இறங்கியது.
இந்த நிகழ்வின்போது விமானத்தில் இருவர் இருந்தனர். இவர்கள் இருவருமே அதன் விமானிகள்.
ஹொனொலுலுவில் இருந்து மாவி எனும் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தச் சரக்கு விமானம் டேனியல் கே இன்னாவே சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே கடலுக்குள் இறங்கியது.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 01:33 மணிக்கு இந்த விபத்து நடந்தது என்று flightradar24 இணையதளம் தெரிவிக்கிறது.
வெள்ளிக்கிழமை காலை இரு விமானிகளையும் கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.
அவர்களில் ஒருவர் விமானத்தின் வால் பகுதியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததாகவும், அவர் மீட்பு விமானம் ஒன்றின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
குயின்ஸ் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஹவாய் மாகாண போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்று உள்ளூர் செய்தி நிறுவனமான ஹவாய் நியூஸ் நௌ தெரிவிக்கிறது.
தலையில் காயத்துடன் இன்னொரு விமானி படகு மூலம் மீட்கப்பட்டார் என்று அந்த ஊடகம் தெரிவிக்கிறது.
என்பிசி தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காணொளிகளில் மீட்கப்பட்ட இரு விமானிகளில் ஒருவர் என்று தோன்றும் நபர் சக்கர நாட்காலி ஒன்றின் மூலம் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் சுயநினைவுடன் இருந்தார்.
இந்த விமான விபத்து நடப்பதற்கு முன்பே தாங்கள் சிக்கலில் உள்ளோம் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கின்றனர். இந்த விமானத்தில் ஒலிப்பதிவுகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், "நம்பர்1 என்ஜினை நாங்கள் ஏற்கனவே இழந்துவிட்டோம்; நாங்கள் இன்னொரு என்ஜினையும் இழக்கப் போகிறோம்; அது மிகவும் சூடாகி விட்டது," என்று அந்த விமானிகளில் ஒருவர் தரைக் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களிடம் தெரிவிக்கிறார்.
அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் போயிங் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் நேஷனல் டிரான்ஸ்போர்ட் சேஃப்ட்டி போர்டு ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்த விமான விபத்து குறித்து விசாரிக்க உள்ளன.
எஞ்சின் பழுதடைந்து இருந்ததாக அந்த விமானிகள் தெரிவித்திருந்தனர். ஹொனோலுலுவுக்குத் திரும்ப அவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த பொழுது, அந்த விமானத்தை கடலில் இறக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது என்று பெடரால் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
flightradar24 இணையதளத்தின் ட்விட்டர் பக்கத்தில் போயிங் 737-200 சரக்கு விமானம் டிரான்ஏர் எனும் நிறுவனத்தால் 2014-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1975ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விமானம் முதலில் பசிஃபிக் வெஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
டிரான்ஏர் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி இந்த நிறுவனம் 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஹவாயில் உள்ள மிகப்பெரிய விமான வழி சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனத்திடம் ஐந்து போயிங் 737 விமானங்கள் உள்ளன.
போயிங் 737 விமானங்களும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களும் வெவ்வேறு என்பது குறிப்பிடத்தக்கது.
2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த இரு வேறு விமான விபத்துகளில் பல நூறு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் அனைத்தும் உலகில் உள்ள விமானப் போக்குவரத்து நிறுவனங்களால் பயன்பாட்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த ரக விமானங்கள் பறப்பதற்கு மீண்டும் 2020ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் ஒழுங்காற்று அமைப்புகள் அனுமதி அளித்தன. ஆனால் சமீபத்தில் அவை மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.