புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...!!

முருங்கை இலைச்சாற்றுடன் சம அளவு எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வருவதால் சத்துக்குறைபாடு, ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி மற்றும்  தோலின் வறட்சி குணமடையும்.

சிலருக்கு உடலில் நீர் வற்றி, உடல் உஷ்ணமடைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.
 
முருங்கை இலைச்சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துக் குடிப்பதால் உடலுக்கு பலம் கிடைக்கும். முருங்கைப்பூ பிஞ்சான உடன் தோலோடு சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

முருங்கைப் பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பைமேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி சொறி, சிரங்கு, கரப்பான் ஆகிய தோல் நோய்களின் மீது பூசிவர விரைவில் குணமாகும்.
 
கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்கச் செல்லும் முன் முருங்கைக் கீரைச்சாறும் மற்றும் தேன்  கலந்து கொடுத்தால் பார்வை தெளிவாக தெரியும்.
 
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.
 
முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம் மற்றும் பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகளான மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
 
முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.