வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்கு குணம்தரும் இயற்கை மருத்துவ முறைகள்...!

பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. இந்நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கைகொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள்  இல்லாதது.
குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஊறல்,  படை எல்லாம் ஓடிப்போய்விடும். குணம் தெரிந்தவுடன் மருந்தைக் கைவிட்டுவிடலாம். இதனைக் காலை நேரத்தில் பூசிக் குளித்தால் நல்லது.
 
இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.
அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.
 
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பரங்கிச் சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல்  சம்பந்தமான நோய்கள் குறையும்.
 
குடசப்பாலை பட்டையை மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் சரும நோய்கள் குறையும்.
 
வேப்பிலை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில்  குளித்தாலும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்குக் குணம் கிடைக்கும்.
 
கல்லுருவி இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல்  நோய்கள் குறையும்.
 
20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். இது 200 மிலி ஆகியதும் இறக்கிவிட வேண்டும். காலையில் 100 மிலி, சாயங்காலம் 100 மிலி குடித்து வந்தால் தோல் நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.