புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள வாழை !!

வாழையின் காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. 

மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். 
 
வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து எதிர்காலத்தில் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.
 
மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம். நாம் வாழைக்காயை சமைக்கும்போது அதை, முழுவதுமாக உரித்து விடுகிறோம். அப்படி செய்யாமல் வாழைக்காயின் மேல் தோலை மட்டும் அழுத்தி சீவாமல், மேலாக மெல்லியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. 
 
வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
 
வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாய்வு மிகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. வாழைப்பிஞ்சுகளை பத்தியத்திற்கு சாப்பிடலாம் என்றாலும் மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன ஸ்லைஸ்களாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
 
மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது.