1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும் அற்புத மூலிகை கரிசலாங்கண்ணி !!

கரிசலாங்கண்ணி களைச்செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் கரிசாலைக்கு உள்ளது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

மஞ்சள் காமாலை தீர பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து, பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு, ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இதற்கு உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும். 
 
மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்பட தேவையான அளவு பசுமையான கரிசாலை இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, நன்றாகக் கழுவி, பசையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன், 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் குழைத்து 2 பங்கு நல்லெண்ணெய்யில் கலந்து, அடுப்பில் வைத்து, நீர் வற்றுமளவிற்கு காய்ச்சி, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதனை ஒரு தேக்கரண்டி அளவு, 100 மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து, குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.
 
கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும். மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டுவர வேண்டும்.
 
மஞ்சள் கரிசலாங்கண்ணி, பொற்றலை, பொற்கொடி, பொற்றலைக் கரிப்பான், பொற்றலைக் கையாந்தகரை ஆகிய பெயர்களும் மஞ்சள் கரிசாலைக்கு உண்டு. சில இடங்களில், முக்கியமாக நீர்வளம் மிகுந்த இடங்களில் வளரும். பெரும்பாலும், வீடுகளில், அழகிற்காகவும், அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.