வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை பயன்கள் உண்டா...!
ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது.
உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும்.
தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்கள் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும்.
அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. இருந்தால் ஆறிவிடும். மேலும், தோல் பளபளக்கும். வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.
வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும்.
செவ்வாழை குருதியை அதிகரிக்கும். மலை வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் வாழைப்பழம் அம்மை நோயை குணமாக்கும். பச்சை வாழை உடம்புக்கு குளிர்ச்சி தரும். நேந்திரம் பழம் சருமத்தை பளபளப்பாக்கும். மொந்தன் வாழை உடல் வறட்சியை போக்கும். நாட்டு வாழைப்பழம் குடல் புண்ணை ஆற்றும்.