புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்ட நுணா எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...?

தமிழகமெங்கும் சமவெளிகள் கடற்கரைப் பகுதிகளில் பரவலாக வளர்கின்றது. நுணா அதாவது மஞ்சணத்தி தளிர், இலை, காய், பட்டை, வேர் ஆகியவை மருத்துவப்  பயன் கொண்டவை.

முதிர்ந்த கட்டைகள் மஞ்சள் நிறமானவை. இவை விவசாயக் கருவிகள் செய்யவும், சிறு மரச் சாமான்கள், பொம்மைகள் செய்யவும் மிகவும் உகந்தவை.
 
மரப்பட்டையை நசுக்கி, வெந்நீரில் போட்டு கொதிக்க வைக்க, மஞ்சள் நிறமான சாயம் நீரில் கரையும். இந்த சாயத்தால் துணிகளுக்கு நிறமேற்றம் செயல் இருந்து வந்துள்ளது குறிப்படத்தக்கது.
 
இன்று, கடைகளில் விற்கப்படும் ‘நோனி’ என்ற நுணா சர்பத்- பல்லாயிரக்கணக்கானவர்களால் விரும்பிப் பருகப்படுகிறது. அதாவது, நுணாப்பழத்தில் இருந்து  தயாரிக்கப்படும் இது, காலரா, டைபாய்டு, காமாலை, தைராய்டு, உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்றவற்றைக் குணமாக்குவதாக ஆய்வுகள்  சொல்கின்றன.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கழிச்சல் ஆகியன தீர 5 நுணா இலைகளைப் பசுமையானதாகச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றிரண்டாக நசுக்கி 1/2 லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து கொண்டு தினமும் காலை மாலை வேளைகளில் 20 மி.லி. வீதம் உள்ளுக்கு  கொடுக்க வேண்டும்.
 
புண்கள், சிரங்குகள் குணமாக நுணா இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். பேதியாக 10 கிராம் நுணா வேரை நசுக்கி ½ லிட்டர் நீரில் போட்டு  ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

பல் சொத்தை குணமாக முதிர்ந்த நுணா காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊறவைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வரவேண்டும்.