செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இந்த மூலிகைகளை வீட்டில் வளர்ப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா...?

ஒவ்வொருவரின் வீட்டிலும் இந்த மூலிகைகள் கட்டாயம் இருக்கவேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நிலவேம்பு, கற்பூரவள்ளி, ஆடாதொடை, நொச்சி ஆகியவை ஆகும்.

துளசி: துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு  போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
 
தூதுவளை: தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை  கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
 
சோற்றுக் கற்றாழை: இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும்  உண்டு. தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும்.  வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
 
மஞ்சள் கரிசாலாங்கண்ணி: ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
 
பொன்னாங்கண்ணி: வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே  பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
 
நிலவேம்பு: நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு  எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.
 
கற்பூரவள்ளி அல்லது ஓமவள்ளி: கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி  குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 
அருகம்புல்: அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும்.  தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
 
ஆடாதொடை: ஆடாதொடையின் இலைச் சாரும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, மிகுந்து மூச்சுத்  திணறல், இருமல், இரத்த கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.