செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

முகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்...!

முகப்பருக்கள் வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த இறந்த செல்களை  நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும்.
நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு வந்து நிரந்தரமாக ஏற்படுத்திவிட்ட  தழும்புகளை போக்குவது என்பது பற்றி பார்ப்போம்.
 
கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். மேலும் இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள என்சைம்  தோலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு, பாக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது. 
 
கற்றாழையில் தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மை போன்றவற்றையும் நீக்கும். தோல் வறட்டுத்தன்மையை அடையும்போது சருமத்தை  சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் தோன்றும் வீக்கத்தையும் குறைக்கும்.
 
சோற்றுக் கற்றாழையின் மேலிருக்கும் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து, அத்துடன் தரம் நிறைந்த மஞ்சள் தூளை ஒரு  ஸ்பூன் அளவு இணைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் இடத்தில் இந்த ஜெல்லை தடவி இருபது நிமிடம் கழித்து  முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்தால், உடலின் சூட்டைத் தணிப்பதுடன், முகப்பரு வருவதைக்  கட்டுப்படுத்தும். பரு வந்ததற்கான தடம் நீங்கும்.
 
இயற்கையாகவே முகப்பரு மற்றும் முகப்பருவால் வரும் தடத்தைக் குறைப்பதில் தேயிலை மர எண்ணெய் (டீ ட்ரீ ஆயில்) பயன்படுகிறது. நல்லெண்ணெய்,  ஆலிவ் ஆயில் போன்றவையும் தோலிற்கு மிகவும் நல்லது.
 
நல்லெண்ணெயுடன் டீ ட்ரீ ஆயிலைக் கலந்து எங்கெல்லாம் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இரவு நேரத்தில் முகத்தில் தடவி, காலையில்  முகத்தைக் கழுவ வேண்டும். கழுவுவதற்கு முன்பு காட்டன் வைத்து துடைத்துவிட்டும் முகத்தைக் கழுவலாம். இதை தொடர்ச்சியாகச் செய்தால் முகப்பரு வந்த  தடம் சுத்தமாக நீங்கும். பருவும் வராது. தோலில் இருக்கும் ஃபங்கஸ்களையும் நீக்கி, பருவைக் கட்டுப்படுத்தும்.
 
ஜாதிக்காய் பவுடரை காய்ச்சாத பாலில் ஊற வைத்து கல்லில் நன்றாக இளைக்க உரசி முகம் முழுதும் போடுவதால், முகம் பொலிவாவதுடன், முகப்பரு நீங்கி,  பரு வந்த தடமும் மறைந்துவிடும்.