அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய் !!
ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும்.
வேர் வாதநோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும்.
ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன. ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும்.
ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.
3 தேக்கரண்டி விளக்கெண்ணெய்யுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து உள்ளுக்குள் கொடுக்க மலச்சிக்கல் தீரும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் 2 டம்ளர் மோர் குடிக்கலாம்.
4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும். சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.
தெவிட்டலான மணம் கொண்டதாகவும் இருக்கும். தரமான எண்ணெய்யையே உள்மருந்தாகக் கொடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.