புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (16:51 IST)

மம்தாவா... நானா... ஒரு கை பாத்திடுறேன்!

லக்னோ: ஹெலிகாப்டரில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மார்க்கமாக மேற்கு வங்கத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செல்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி ஒன்று சேர்ந்துவிட்டதால் பாஜகவுக்கு அங்கு வெற்றி பெறுவது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இதேபோல் கர்நாடகாவில் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து வருகின்றன. அதனால் அங்கும் வெற்றி பெறுவதுக்கு பாஜக கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
இந்த சூழலில் பாஜக மேற்கு வங்கத்தில் அபரிதமாக வளர்ந்து வருதாக கூறப்படுகிறது. அங்கு மம்தா பானர்ஜிக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்துவதில் இடதுசாரிகளை மிஞ்சிவிட்டது. இதனால் மேற்கு வங்கத்தில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என பாஜக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் இன்று நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
 
இதற்காக யோகி ஆதித்யநாத் உ.பி.யில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புருலியா செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ நகர் வரை ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து காரில் புருலியா செல்ல முடிவு செய்தார் யோகி. அதன்படி, இன்று பிற்பகல் சட்டசபைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு உ.பி.யில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். 3.40 மணியளவில் போகாரோ சென்றடைந்த அவர், அங்கிருந்து காரில் புருலியா சென்றுள்ளார். 
 
முன்னதாக, ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால்,  யோகி ஆதித்யாநாத், மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். பழிவாங்கல், வன்முறை மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் மம்தாவின் அரசு ஈடுபடுவதாக கூறியிருந்தார். எனவே இந்த முறை மேற்குவங்கத்துக்கு சென்றுள்ள யோகி கடுமையான பிரசாரங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.