புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 பிப்ரவரி 2019 (18:36 IST)

அரசியலும் இல்லை, கட்சியும் இல்லை: சூப்பர் ஸ்டார் அதிரடி அறிக்கை

எந்த அரசியல் கட்சியில் இணையபோவதும் இல்லை, தனிக்கட்சி ஆரம்பிக்க போவதும் இல்லை, தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் இல்லை என மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அறிக்கை ஒன்றின் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் மோகன்லால், பாஜகவில் இணையவுள்ளதாகவும், தனிக்கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகவும் திருவனந்தபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தது.

மோகன்லாலில் நடிப்பை ரசிக்கும் அவரது ரசிகர்கள், அவர் அரசியலில் நுழைவதை சற்றும் விரும்பவில்லை. மோகன்லால் அரசியலில் குதித்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அவரது ரசிகர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தனது ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட மோகன்லால் அதில், தனக்கு எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை என்றும் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்றும் விளக்கியுள்ளார். மேலும் ஒரு நடிகனாக தன்னுடைய பணியை சிறப்பாக செய்வதாகவும் தனக்கு தன்னுடைய துறை அதிகமான சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் தனக்கு அரசியல் பாடம் சிறிதும் தெரியாது என்றும் மோகன்லால் கூறியுள்ளார்.