ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (13:57 IST)

அமைச்சர் பதவி தருகிறேன் ; ஆசை வார்த்தை கூறும் எடியூரப்பா : வெளியான ஆடியோ

தனக்கு ஆதரவாக வாக்களித்தால் அமைச்சர் பதவி தருகிறேன் என காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரிடம் எடியூரப்பா பேசிய ஆடியோவை கர்நாடக காங்கிரஸ் தரப்பு வெளியிட்டுள்ளது.

 
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதுதான் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. எனவே, ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக எடியூரப்பா தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்னும் சட்டசபைக்கு வந்து பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் பாஜகவின் பிடியில் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், காங்கிரஸ் ஹிரிகேரூ எம்.எல்.ஏ பி.சி.பட்டீலிடம் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோவை காங்கிரஸ் தரப்பு வெளியிட்டுள்ளது. அவரிடம் உன்னை அமைச்சராக்குகிறேன், என்னோடு இணையுங்கள் என்று எடியூரப்பா பேசுகிறார். மேலும், கொச்சின் செல்லாதீர்கள். திரும்ப வாருங்கள். உங்களை அமைச்சராக்குகிறேன் என்று கூறுகிறார். அந்த எம்எல்ஏ, அதற்கு பிறகு என்ன என்றதற்கு, முதலில் திரும்ப வாருங்கள். அதன் பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
 
கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்படுவதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பேருந்தில் அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு இந்த உரையாடல் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆடியோ உரையாடல் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.