உலக ஹோமியோபதி தினம்..! பல நாடுகள் பின்பற்றும் மருத்துவ முறை..! ஜனாதிபதி உரை..!!
ஹோமியோபதி மருத்துவ முறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்வது அவசியமாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் ஹோமியோபதி கருத்தரங்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எளிமையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சிகிச்சை முறையாக ஹோமியோபதி முறை பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.
உலகம் முழுவதும், சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூரில் பல நிறுவனங்கள் ஹோமியோபதியை ஊக்குவித்து வருவதாகக் கூறிய அவர், இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவத்தை ஊக்குவிப்பதில் ஆயுஷ் அமைச்சகம், மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஹோமியோபதி ஆணையம், தேசிய ஹோமியோபதி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களையும் பாராட்டினார்.
21 ஆம் நூற்றாண்டில் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். எனவே, இந்த கருத்தரங்கின் கருப்பொருளான ஆராய்ச்சியை மேம்படுத்துதல், தேர்ச்சியை மேம்படுத்துதல் என்பது மிகவும் பொருத்தமானது. ஹோமியோபதி மருத்துவத்தைப் பின்பற்றுவதுடன், அதனை மேலும் பிரபலப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் தேர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.
விஞ்ஞான ரீதியாக இந்த மருத்துவ முறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்வது அவசியமாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.