1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (10:46 IST)

இன்று இடைக்கால பட்ஜெட்.! நிதி அமைச்சரை வாழ்த்திய குடியரசுத் தலைவர்..!

finance minister
இன்னும் சற்று நேரத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முதல் முறையாக வருகை தந்த குடியரசு தலைவர் முர்முவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 5 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாகவும், வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
 
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். மொரார்ஜி தேசாய்க்கு பிறகு,தொடர்ந்து 6 முறை தாக்கல் செய்யும் பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
 
nirmala
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர்கள் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் மட்டுமே இதுவரை தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர். இன்று தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி அளவுகளில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
இந்நிலையில் நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.