வாடகைக்கு வீடு பார்க்க சென்ற பெண்ணை கணவன் முன்னாலேயே 8 பேர் கற்பழித்த கொடுமை

வாடகைக்கு வீடு பார்க்க சென்ற பெண்ணை கணவன் முன்னாலேயே 8 பேர் கற்பழித்த கொடுமை


Murugan| Last Modified புதன், 2 நவம்பர் 2016 (09:36 IST)
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற பெண்ணை, கணவரின் கண் முன்னாலேயே 8 பேர் கூட்டாக சேர்ந்து கற்பழித்த விவகாரம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 
மும்பை ஜோகேஷ்வரி கிழக்கு பகுதியான அம்போலியில் குடிசை பகுதியில் வசிக்கும் 28 வயது பெண் ஒருவர், தன்னுடைய கணவன், மாமனார், மாமியார் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் வாடகை ஒப்பந்தம் முடிய இருப்பதால், வேறு வீடு தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
எனவே நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும், அருகில் இருக்கும் ஷாம் நகர் குடிசைப் பகுதியில் உள்ள வீட்டு தரகரான ஒரு மூதாட்டி உதவியுடன் வாடகைக்கு வீடு தேடி வந்தனர். இரவு வரை எந்த வீடும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. நேரமாகி விட்டதால், அந்த மூதாட்டியின் வீட்டிலேயே அவர்கள் தங்க நேரிட்டது.
 
இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த, அந்த பகுதியை சேர்ந்த 8 வாலிபர்கள், இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் நுழைந்தனர். சத்தம் கேட்டு கணவன், மனைவி இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர். அந்த பெண்ணின் கணவரை அடித்து உதைத்த அவர்கள், அவரின் கை, கால்களை கட்டிப்போட்டனர். 
 
மேலும், கத்தி முனையில் அந்த பெண்ணை அவர்கள் அனைவரும் மாறி மாறி கற்பழித்தனர். அதன் பின் அதிகாலை 2 மணியளவில் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், மயங்கிய நிலையில் இருந்த அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
இதுகுறித்து அப்பெண்ணின் கணவர், மற்றும் மூதாட்டி அளித்த புகாரின் பேரில், தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்,  இந்த குற்றத்தில் தொடர்புடைய 8 பேரையும் அதிகாலை 5 மணியளவில் கைது செய்தனர். 
 
அவர்கள் அனைவரும் 22 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 4ம் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். எனவே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இந்த கற்பழிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :