1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (21:41 IST)

மோரில் விஷம்: திருமணமான ஒரே வாரத்தில் கணவரை கொல்ல முயற்சித்த மனைவி?

திருமணம் ஆன ஒரே வாரத்தில் கணவரை அவருடைய மனைவி மோரில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர  மாநிலம் கர்னூல் என்ற பகுதியை சேர்ந்த லிங்கமையா என்பவருக்கும் நாகமணி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் மணமக்களுக்கு விருந்துகள் தடபுடலாக நடந்தது. இந்த நிலையில் நாகமணி தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அவரை அழைத்துவர லிங்கமையா அவருடைய வீட்டிற்கு சென்றபோது, தனது கணவரை வரவேற்ற நாகமணி அவருக்கு குடிக்க மோர் கொடுத்துள்ளார் 
 
இந்த மோரை லிங்கமையா குடித்த ஒரு சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். மருத்துவர்கள் நாகமணியை பரிசோதனை செய்து அவர் குடித்த மோரில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர்
 
இதனை அடுத்து லிங்கமையாவின் மனைவி நாகமணியை போலீஸார் விசாரணை செய்தனர். நாகமணிக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என்றும் அவரை வலுக்கட்டாயமாக அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் லிங்கமையா பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
 
ஆனால் நாகமணி இதை மறுத்தார். தான் கணவருக்கு கொடுத்தது கெட்டுப்போன மோராக இருக்கலாம் என்றும், அதனால் தனது கணவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், தான் கொலை செய்யும் நோக்கத்துடன் மோரை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் மீதமிருந்த மோரை போலீசார் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்த அறிக்கை வெளிவந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். திருமணம் ஆன ஒரே வாரத்தில் கணவனை மனைவியே மோரில் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது