கிரிமினல் வழக்குகளில் ஆளுநரை விசாரிக்க விலக்கு: பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
கிரிமினல் வழக்குகளில் ஆளுநரை விசாரிக்க விதிக்கப்பட்டுள்ள சட்ட விலக்கை எதிர்த்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் தொல்லை விவகாரத்தில் மேற்கு வங்க ஆளுநர் மாளிகை பெண் ஊழியர் தொடர்ந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கிரிமினல் வழக்குகளில் ஆளுநரை விசாரிக்க விதிக்கப்பட்டுள்ள சட்ட விலக்கை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தனக்கும், குடும்பத்தாருக்கும் பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க மேற்கு வங்க அரசு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மேற்கு வங்க ஆளுநர் பெண் ஊழியரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ஆளுநர் மாளிகையின் காவல் கட்டுப்பாட்டு அறையில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க மாநில காவல்துறை சார்பில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 361, ஆளுநர் பதவியிலிருக்கும் ஒருவரை அவருக்கெதிரான குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கி வைப்பதால் சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
இன்னொருபக்கம், தன்மீதான குற்றச்சாட்டை அரசியல் உள்நோக்கம் கொண்டது என மேற்குவங்க ஆளுனர் மறுத்துள்ளார்.
Edited by Siva