1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஜூன் 2025 (10:20 IST)

இனி 24 மணி நேரத்திற்கு முன்பே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தெரிந்துவிடும்: ரயில்வே துறை

railway
இந்திய ரயில்வே, ரயில் பயணிகளின் வசதிக்காக ஒரு அசத்தலான திட்டத்தை சோதனை முறையில் தொடங்கியுள்ளது. இதுவரை ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்புதான் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்பது தெரியும். ஆனால், இனி 24 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் நிலவரத்தை தெரிவிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இது குறித்து ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திலீப் குமார் கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் ரயில்வே மண்டலத்தில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் பயணிகளின் நிச்சயமற்ற சூழலை தவிர்க்கவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது," என்றார்.
 
மேலும் வரும் ஜூலை 1 முதல், தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படவுள்ளது. அதாவது, ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட பயணிகள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
 
அதுமட்டுமல்லாமல், ஜூலை 15 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆதார் எண் பதிவுடன் கூடிய ஒருமுறை கடவுச்சொல்லை ஐஆர்சிடிசி  இணையதளம் அல்லது அதன் செயலியில் கட்டாயம் உள்ளிட வேண்டும். தட்கல் டிக்கெட்டுகளின் பலன்கள் பொது பயணிகளை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran