பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியால் விராத் கோஹ்லிக்கு சிக்கலா?
பஞ்சாப் நேஷனல் வங்கியில் உத்தரவாத கடிதம் பெற்று பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி சட்டவிரோதமாக ரூ.11500 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வங்கியின் ஊழியர்கள் ஏராளமானோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிஎன்பி வங்கியின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மீண்டும் பங்குகளை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பரத்தூதராக இருந்து வருகிறார். வங்கிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக விராத் கோலி தூதரக பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், இதனால் பிஎன்பி வங்கிக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகிகள், பிஎன்பி வங்கியின் விளம்பரத்தூதராக விராத் கோலி தொடர்வார் என்றும் வங்கியின் பிரச்சனைகளுக்கும் விராத் கோஹ்லியின் தூதரக செயல்பாடுகளும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளனர்.